வாசிக்க: ஆதியாகமம் 3,4; சங்கீதம் 2; மத்தேயு 1:18-25
வேத வசனம்: ஆதியாகமம் 3:1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.
கவனித்தல்: தேவன் மனிதனுக்காக உருவாக்கிக் கொடுத்தவைகள் மீது ஒரு சந்தேகம் உண்டாக்கிய மிக தந்திரமான கேள்வியை நாம் இங்கு வாசிக்கிறோம். ஏவாளின் பதிலையும், அதன் விளைவால் முழு மனுக்குலமும் பாதிக்கப்பட்டதையும் நாம் அறிந்திருக்கிறாம். தன் குரலைக் கேட்கத் துவங்குபவர்களின் மனதில் சந்தேகங்களை உண்டாக்கி, சாத்தான் தன் வஞ்சக வேலையை ஆரம்பிக்கிறான். மனிதர்கள் பிசாசோடு பேசத் துவங்குகையில், அவர்களை தன் பொய், புரட்டுகளினால் ஏமாற்றுகிறான். முடிவில், ஏவாளைப் போல, அவர்கள் பிசாசின் தீய திட்டங்களுக்கு இரையாகி விடுகிறார்கள். மறுபக்கத்திலோ, தங்களிடம் சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்க காரணங்கள் இருந்த போதிலும் கூட, மரியாளும் யோசேப்பும் தங்களிடம் சொல்லப்பட்ட வார்த்தையை முழுவதுமாக நம்பினார்கள் என்று நாம் பார்க்கிறோம்.
பயன்பாடு: என் மனதில் சந்தேகம் எழும்புகையில், பிசாசுடன் பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நான் தேவனிடம் வந்து, அவரிடம் பேச வேண்டும். நான் சந்தேகங்களுடன் இருக்குமட்டும், பிசாசானவன் தன் அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி என்னை வஞ்சிக்க முயல்கிறான். சந்தேகம் கொள்வது பாவம் அல்ல. ஆனால், அச்சந்தேகங்களுக்கு நான் தருகிற பதிலானது தேவனிடமிருந்து என்னைப் பிரித்து, அவருக்கெதிராக நான் பாவம் செய்யும்படி என்னை தவறாக வழிநடத்த வல்லது. என்னை நேசித்து, என் மேல் கரிசனையாயிருக்கிற தேவனை நான் தைரியமாக தொடர்பு கொள்ள முடியும். அவர் என் சந்தேகங்களைப் பொறுமையுடன் கேட்டு, ஒரு தெளிவைத் தந்து என் குழப்பங்களிலிருந்து வெளிவர எனக்குதவுகிறார். நான் சாத்தான் (அ) பிசாசி சொல்வதைக் கேட்பேனாகில், சந்தேகங்கள் குழப்பங்களையும், குழப்பங்கள் மன விரக்தியையும், அவ்விரக்தியானது தேவனுக்கும் எனக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குகிறது. நான் தேவனிடம் செல்வதைத் தெரிவு செய்தால், தேவனுடனான என் உறவு தொடர்ந்து உறுதியானதாக இருக்கும். உண்மையைச் சொல்வதானால், அது முன்பிருந்ததைக் காட்டிலும் அதிக நெருக்கமுள்ள அன்பின் உறவாக மாறுகிறது.
ஜெபம்: பிதாவே, நீர் எனக்கு உண்டாக்கி வைத்திருக்கிற எல்லாவற்றிற்காகவும் நன்றி. உம் வார்த்தைகளை சந்தேகமின்றி விசுவாசிக்க எனக்கு உதவும். சந்தேகம் வரும் நேரங்களில், அதை மூடி மறைக்காமல், பிசாசுக்கு எதிர்த்து நிற்கவும், எவ்வித தயக்கமுமின்றி உம்மிடம் ஓடி வரவும் எனக்கு உதவும். ஆமென்.
அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
2/1/2021
No comments:
Post a Comment