Tuesday, January 5, 2021

நீதியின் பாதை - நடக்க ஆயத்தமா?

 வாசிக்க: ஆதியாகமம் 11, 12; சங்கீதம் 6; மத்தேயு 3:13-17


வேதவசனம்: மத்தேயு 3: 15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.

கவனித்தல்: இன்றைய நம் வேதவாசிப்பில், மத்தேயு எழுதிய நற்செய்தி நூலில் இயேசுவின் முதல் வார்த்தைகளைக் காண்கிறோம். அது வரையிலும், ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்த, அறியப்படாத ஒரு நபராகவே இயேசு இருந்தார். இயேசுவைப் பற்றியும் அவருக்கும் தனக்குமான உறவு பற்றியும், சில விஷயங்களைத் தன் தாயின் மூலமாக யோவான்ஸ்நானகன் அறிந்திருக்கக் கூடும். ஆயினும், இயேசு யார் என்பதைப் பற்றி யோவான் முழுமையாக அறிந்திருக்கவில்லை (யோவான் 1:31). இன்னொரு பக்கத்திலோ, தன் சுய அடையாளத்தை நன்றாக அறிந்திருந்தாலும் கூட, “எல்லா நீதியையும் நிறைவேற்ற” இயேசு விருப்பம் உள்ளவராக இருந்தார். இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெற்ற போது, அது யோவானுடைய தீர்க்கதரிசன ஊழியத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறதாக இருந்தது. நீண்ட காலமாக மக்கள் கேட்க காத்திருந்த நற்செய்தியான மேசியாவின் வருகையைப் பற்றிய செய்தியை அறிவிக்கிற ஒரு நேரமாக அது இருந்தது. நற்செய்தி நூல் சொல்வது போல, இயேசு யார் என்பதைப் பற்றிய பரலோக உறுதிப்படுத்தலை அவரைச் சுற்றி இருந்தவர்கள் கேட்க முடிந்தது. 

பயன்பாடு: மற்றவர்கள் என் அடையாளத்தைப் பற்றி நான் யார் என்பதைப் பற்றி அறியாதவர்களாக இருக்கலாம். ஆயினும், தேவனுக்கு முன்பாக எல்லா நீதியையும் நிறைவேறுவதை அது தடுக்கக் கூடாது. என் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் சரி, சரியான (ஏற்ற) காரியங்களைச் செய்ய நான் முன் செல்ல வேண்டும். நான் என்ன செய்தாலும், அதை கர்த்தருக்காக நான் செய்ய வேண்டும், என்னைச் சுற்றி இருப்பவர்களுக்காக மட்டுமல்ல. நான் அவ்வாறு செய்யும்போது, என் வாழ்க்கை மூலமாக மற்றவர்களும் இயேசுவைக் காணவும், கேட்கவும் செய்ய நிர்ணயிக்க வேண்டும். மற்ற மனிதர்கள் என் வாழ்க்கை மற்றும் செயல்கள் மூலமாக தேவனைப் பற்றி அறிந்து கொள்ளவும், கண்டு கொள்ளவும் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

ஜெபம்: பிதாவாகிய தேவனே, உம் நீதியின் பாதையில் நடக்க இயேசுவின் வாழ்க்கையின் மூலமாக நீர் காண்பித்த முன்மாதிரிக்காக உமக்கு நன்றி. உம் வழியில் நடக்க என் கால்களை பலப்படுத்தி அருளும். ஆமென்.

-அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
6 ஜனவரி 2021


No comments:

Post a Comment