Thursday, December 31, 2020

கீழ்ப்படிவதற்கான சுதந்திரம்

 வாசிக்க: ஆதியாகமம் 1,2; சங்கீதம் 1; மத்தேயு 1:1-17

வேத வசனம்: ஆதியாகமம் 2: 15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

கவனித்தல்: ஏதேன் தோட்டத்தில் இருந்தவை சாப்பிட மிகவும் அருமையானவையாக “புசிப்பதற்கு நலமான”வையாக இருந்தன (வ.9).  முதல் மனிதன் தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் புசிக்கலாம், ஆனால் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் (மரத்தின்) கனியை மட்டும் சாப்பிடக் கூடாது என தேவன் சொல்லி இருந்தார். அது, அவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள விரும்பியதையெல்லாம் சாப்பிடுவதற்கான அனுமதி அல்ல. மாறாக, தன்னை சிருஷ்டித்த தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கான சுதந்திரம் ஆகும். கர்த்தருடைய வார்த்தையானது என் மகிழ்ச்சியாகவும் தியானமாகவும் மாறும்போது, நான் முணுமுணுக்கவோ, முறுமுறுக்கவோ செய்யாமல், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். தேவன் அன்பானவராகவே இருப்பதல், அவர் சொல்பவை எப்பொழுதுமே நல்ல முடிவுகளையே தரும்.

பயன்பாடு: ஒரு புதிய நாள், அல்லது மாதம் அல்லது வருடத்தை தேவன் எனக்கு முன்பாக வைத்திருக்கிறார். என் வாழ்வின் காரியங்களை நானே செய்வதற்கான சுதந்தரத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். ஆயினும்,  கட்டுப்பாடற்ற, அசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்வதற்காக இந்த சுதந்திரம் கொடுக்கப்படவில்லை. தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக ஒரு பரிசுத்தமான வாழ்க்கையை வாழ, நான் இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவேன். அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது போல, “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது” (1 கொரி.6:12; 10:23). ஆகவே, என் கண்களின் இச்சை என்னை ஜெயிக்க விடமாட்டேன், மாறாக தேவனுடைய வார்த்தையை நான் தியானிப்பேன். நான் இதைச் செய்யும்போது, வேதாகமம் சொல்வது போல, என் வாழ்வில் எல்லா வழியிலும் நான்   ஆசீர்வதிக்கப்பட்டவனாக இருப்பேன் (சங்.1). 

ஜெபம்: பிதாவே, நீர் இந்த பூமியில் எனக்காக ஏற்ப்படுத்தி இருக்கிற, கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்காக நன்றி. நீர் விரும்புகிற வண்ணம் அவைகளை பயன்படுத்த எனக்குதவும். பரிசுத்த ஆவியானவரே! தேவனுக்காக அர்ப்பணம் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ உதவும். ஆமென்.

அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
01/01/2021


No comments:

Post a Comment