Sunday, December 27, 2020

எதுவரைக்கும் கர்த்தாவே?

 வாசிக்க வேண்டிய பகுதி: ஆபகூக் 1-3

வேதவசனம்: ஆபகூக் 1:2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!

ஆபகூக் 2:4 தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

கவனித்தல்: தீர்க்கதரிசியாகிய ஆபகூக்குக்கும் தேவனுக்கும் இடையேயான ஒரு உரையாடலை ஆபகூக் தீர்க்கதரிசன புத்தகத்தில் வாசிக்கிறோம். எதுவரைக்கும் என்று பதில் கிடைக்காத ஒரு நீடிய காத்திருத்தல், அல்லது தொடர்ச்சியான ஏமாற்றம் மற்றும் விரக்தியின் மத்தியில் ஆபகூக் தேவனிடம் இருந்து ஒரு பதிலை, தேவனுடைய இடைபடுதலை எதிர் நோக்கி இருந்திருக்கக் கூடும். தேவன் ஆபகூக்கிடம் அன்று சொன்ன அதே பதிலைத்தான், இன்றும் சொல்கிறார்: தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

பயன்பாடு:கிரியைகளினால் அல்ல, விசுவாசத்தினால் உண்டாகும் இரட்சிப்பைப் பற்றி வேதம் சொல்கிறது. அது ஆபிரகாமாக இருந்தாலும் சரி, ஆபகூக்காக இருந்தாலும் சரி, அல்லது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும் எவராக இருந்தாலும் சரி - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். புதிய ஏற்ப்பாட்டில் மூன்று இடங்களில் விசுவாசத்தினால் உண்டாகும் இரட்சிப்பு பற்றி வாசிக்கிறோம். அனேக கிரியைகளைச் செய்தும் ஒன்றும் நடக்க வில்லையே என்று அங்கலாய்ப்பதற்குப் பதிலாக, விசுவாசத்துடன், தேவன் மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவது, பாடலாய் பாடுவது மிகுந்த ஊக்கமளிக்கும். ஏனெனில், விசுவாசமானது தேவன் நம் வாழ்வில் செயல்பட அனுமதிக்கிறது. 

ஜெபம்: ஆண்டவரே! என் வாழ்க்கையின் காத்திருத்தல்களையும் எதிர்பார்ப்புகளையும் நீர் அறிந்திருக்கிறீர். பதில் கொடுக்கும் தேவன் நீர், எங்களுக்குப் பதிலாக சிலுவையில் உம் உயிரையே கொடுத்து மீட்டவரும் நீரே. இன்றும், என்றும் உம்மை விசுவாசித்து வாழ அருளும். ஆமென்.

No comments:

Post a Comment