Sunday, January 3, 2021

எல்லாவற்றிலும்....

வாசிக்க: ஆதியாகமம் 7,8; சங்கீதம் 4; மத்தேயு 2:16-23

வேதவசனம்: ஆதியாகமம் 7:நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.

கவனித்தல்: நோவாவின் காலத்தில், ஒரு பேழையைக் (பெரிய மிதவை அல்லது கப்பல்) கட்டுவதும், பேரழிவு வெள்ளத்தைப் பற்றி எச்சரிக்கைச் செய்தியை ஜனங்களிடம் சொல்வதும், அவரைச் சுற்றியிருந்த மக்களுக்கு நூதனமானதாக, இதுவரைக் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்திருக்கும்.  “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” உண்மைதான் என்றாலும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் செய்து முடிப்பதில் நோவா கவனமுள்ளவராக இருந்தார். “நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா” என நோவாவைப் பற்றி புதிய ஏற்ப்பாட்டில் வாசிக்கிறோம். அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த காலத்தில், ஜனங்கள் அவரைப் பார்த்து பரியாசம் பண்ணி சிரித்திருப்பார்கள். மேலும், ஒருவரும் அவர் சொன்ன எச்சரிக்கை செய்திக்குக் கீழ்ப்படியவில்லை. ஆனால், தேவனுக்குக் கீழ்ப்படிவதில் அவர் உண்மையுள்ளவராக இருந்தார். அவருடைய கீழ்ப்படிதல் அவருடைய முழு குடும்பத்தையும், பேழையில் நுழைந்த அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றியது.

பயன்பாடு: நான் தேவனுக்கும், அவருடைய கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய விரும்புகிறேன். ஆயினும், எல்லாவற்றிலும் அவருக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, என் வசதிக்கேற்றபடி நான் தெரிந்து கொள்ளும் குறிப்பிட்ட காரியங்களில் மட்டுமே கீழ்ப்படிதலுள்ளவனாக நான் இருக்கக் கூடும். காலப்போக்கில், என்னைச் சுற்றியுள்ளவர்கள் தேவனுக்கு செவிகொடுக்காமல் அசட்டையாக இருப்பதைப் பார்த்து, நானும் கூட தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கு உற்சாகம் குறைந்து காணப்படலாம். நான் நினைத்ததை விட அதிகமாக, வாக்குத்தத்தம் நிறைவேற அல்லது நான் எதிர்பார்த்த காரியம் நடைபெற காலம் தாமதித்தல் என்னை விரக்தியடையச் செய்து, நான் தேவனுக்குக் கீழ்ப்படிவதில் சோர்வடையப் பண்ணக் கூடும். நான் தேவனுக்காகக் காத்திருப்பதிலும், அவருடைய வார்த்தை நிறைவேறவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

ஜெபம்: பிதாவே, இந்த நாளுக்கான புத்துணர்ச்சி அளிக்கும் கிருபைக்காக நன்றி. உதட்டளவில் மட்டுமல்ல, என் வாழ்க்கை மற்றும் நான் செய்யும் எல்லா காரியங்களிலும் உம்மை கனப்படுத்த விரும்புகிறேன். இதைச் செய்ய உம் பெலன் எனக்குத் தேவை.  எங்களுக்கு நினைப்பூட்டி, கீழ்ப்படிய உதவுகிற உம் பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573
4 ஜனவரி 2021

No comments:

Post a Comment