வாசிக்க: ஆதியாகமம் 13, 14; சங்கீதம் 7; மத்தேயு 4:1-11
வேதவசனம்: ஆதியாகமம் 13:12 ஆபிராம் கானான்தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
கவனித்தல்: குடும்பத்தில் மூத்தவரான தனக்கு இருந்த உரிமையை நிரூபிப்பதற்குப் பதிலாக, தன் உறவினரான லோத்துவிடம் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை விட்டுக் கொடுத்து ஆபிராம் தன் சிறந்த குணத்தை வெளிப்படுத்துவதை நாம் ஆதியாகமம் 13ல் வாசிக்கிறோம். ஆபிராம் அமைதியை விரும்புகிற ஒரு நபராக, தேவன் தனக்கு வாக்களித்த கானான் தேசத்தில் வாழ்வதற்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்த ஒரு நபராக இருந்தார். அவர் ஒரு பலவீனமான மனிதராக இருந்தார், ஆகவே இப்படிச் செய்தார் என்று நாம் கருதக் கூடாது. ஏனெனில், ஆதியாகமம் 14ல், அவர் நான்கு ராஜாக்களை ஜெயித்து, அவர்கள் சிறைபிடித்துக் கொண்டு போனவர்கள்(லோத்து உட்பட) அனைவரையும் மீட்டு விடுவித்ததை நாம் வாசிக்கிறோம். முக்கியமாக, இந்த உலகத்தின் செல்வம் மற்றும் உடைமைகள் மீது அல்ல, ஆபிராமின் கண்கள் தேவன் மீதும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் மீதும் இருந்தது. தனக்கு ஒரு ராஜ்ஜியத்தை அல்லது வீட்டைக் கட்டி எழுப்புவதற்குப் பதிலாக, ஆபிராம் தேவனுக்குப் பலிபீடத்தைக் கட்டி, “கர்த்தருடைய நாமத்தை தொழுது கொண்டான்” என வாசிக்கிறோம். ஆபிராமின் வாழ்க்கை சமாதானத்தையும், தேவனுடைய வாக்குத்தத்ததையும் பெற உதவியது. ஆனால் லோத்து ஒரு சூழ்நிலைக் கைதியாக நேர்ந்தது.
பயன்பாடு: என்னையும் என் தகுதியையும் நிரூபிப்பதற்குப் பதிலாக, நான் தேவனுடைய திட்டம் மற்றும் அவருடைய சித்தத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதே சமயத்தில், ஒருவர் ஆபத்தில் இருக்கும்போது, அவர் யாராக இருந்தாலும் அவரை புறக்கணிக்காமல், என்னால் செய்யக் கூடியதை நான் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய வாக்குத்தத்தத்தில் வாழ்வதும், தேவனுடன் இருப்பதும் எனக்கு மற்றெதையும் விட அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. ஆகவே, எந்த உலகப் பிரகாரமான சோதனைகளும் என்னை ஜெயிக்க நான் அனுமதிக்க மாட்டேன். இயேசுவைப் போல, தேவனுடைய வார்த்தையை சரியாகப் பயன்படுத்தி, எந்த சோதனைகளையும் ஜெயிப்பேன்.
ஜெபம்: பிதாவே, நீர் எனக்கு முன் வைத்திருக்கிற நல்ல முன்னுதாரணமான வாழ்க்கைக்காக நன்றி. இன்றும் என்றும், உம் வார்த்தையின்படி வாழவும், உம்முடன் எப்போதும் நடக்கவும் உதவும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
7 ஜனவரி 2021
No comments:
Post a Comment