Thursday, January 7, 2021

நீர் என்னைக் காண்கிற தேவன்

 வாசிக்க: ஆதியாகமம் 15, 16; சங்கீதம் 8, மத்தேயு 4:12-25

வேதவசனம்: ஆதியாகமம் 16: 6 அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள். 7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் (கண்டார்)....அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள்.

கவனித்தல்: ஆபிராமை விட்டு விலகிச் சென்ற போது, லோத்து நல்ல வளமான, தண்ணீர் உள்ள இடத்தை தெரிந்தெடுத்து அங்கே போய் வாழ்ந்தான். ஆனால், ஆகாரோ தான் போகும் இடம் தெரியாமல் இலக்கின்றி. சாராய் கடினமான நடத்தினபடியால், அதிலிருந்து தப்பிக்க ஆகார் அவளை விட்டு ஓடிப் போனாள். ஆகாரின் வாழ்க்கையில் நடந்த இந்த துயரத்திற்கு யார் காரணம் என்று ஆராய்ந்து பார்ப்பதற்குப் பதிலாக, ஆதரவற்ற ஆகாருக்கு தேவன் என்ன செய்தார் என்பதை கவனித்துப் பார்ப்பது நலமாயிருக்கும். ஆகாரின் எஜமானராக, அவளுடைய வாழ்க்கையில் இச்சம்பவம் நடைபெறுவதை ஆபிராம் தடுத்திருந்திருக்கலாம், ஆனால் அவர் தடையேதும் பண்ண வில்லை. ஆயினும், தேவையுள்ள ஜனங்களை விசாரித்துக் காண்கிற தேவன், ஆகாரைக் கண்டார். அதரிசனமான (காணக்கூடாத)  தேவன் தன் அன்பை ஆகார் காண்பதற்கு உதவி, ஆகாருக்குப் பிறக்கப் போகிற குழந்தை பற்றியும், அவள் செய்ய வேண்டியவைகளுக்கான ஒரு வழிகாட்டுதலையும் செய்தார். கண்களால் காண முடியாத தேவனின் அன்பை ஆகார் பார்த்ததில் இருந்து தன் வருந்தத்தக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டு, ஆறுதல் அடைந்திருப்பாள் என நாம் எந்த சந்தேகமுமின்றி சொல்ல முடியும்.

பயன்பாடு: என் சுய விருப்பங்கள் மற்றும் தவறான யோசனைகளுக்கு செவிகொடுப்பதை நான் தவிர்க்க வேண்டும். மாறாக, தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்காக நான் அவருக்காக காத்திருக்க வேண்டும். மேலும், நான் தேவனுடைய பார்வையில் இருந்து தப்பி, விலகிச் செல்ல முடியாது என்பதி நினைவில் கொள்ள வேண்டும். நான் யாராக இருந்தாலும், என்னைக் கண்டு, என்னுடன் பேச வல்லவராக தேவன் இருக்கிறார்.  தாவீதைப் போல, “மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்” (சங்.8:4) என்று தேவனிடம் நான் கேட்கக் கூடும். ஆனால், நான் சேவிக்கும் ஜீவனுள்ள தேவன் அன்புடன் என்னைப் பார்க்கிறார். அவர் என்னைப் பற்றி கரிசனையாய் விசாரிக்கிறவராக இருக்கிற படியால், நான் என் கவலைகளை எல்லாம் அவரிடம் விட்டுவிடலாம் (1 பேதுரு 5:7). நான் எங்கிருந்தாலும், என்ன நிலையிலிருந்தாலும், தேவன் என்னைப் பார்த்து, தம் வார்த்தைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதை எதுவும், எவரும் தடுக்க முடியாது. 

ஜெபம்: பிதாவே, எனக்காக யாருமே இல்லை என்று நான் நினைத்த போதும், நான் தனிமையை உணர்ந்த நேரங்களிலும் நீர் என்னைக் காண்கிறபடியால் உமக்கு நன்றி. நீர் என்னைப் பார்க்கும் போது, என்னைப்பற்றி விசாரிக்கும்போது, அதைவிட வேறேதுவும் எனக்கு பெரிது அல்ல. உமக்கு எப்போதும் கீழ்ப்படிகிறவனாக நான் வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
8 ஜனவரி 2021

No comments:

Post a Comment